இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே இந்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார்.
இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தத் தொடங்கினர். எனவே, அதிபர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவசரநிலை அறிவித்தார். எனினும், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே, பதவி விலக மாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார். அதனைத்தொடர்ந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. எனவே நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊரடங்கு நடைமுறையில் இருந்த போதும், பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.
எனவே, இந்த கடும் சூழலில் கொழும்பு போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் சிறப்பு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அதிபர் கோட்டபாய ராஜபக்சே, இந்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவை உருவாக்கப்படவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் மக்களிடம் உரையாற்றியிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படும். புதிய ஆட்சியின் பிரதமருக்கு புதிதாக வேலை திட்டத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டை முன்னேற்றி செல்ல வாய்ப்பு அளிக்கப்படும். மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.