இலங்கையில் 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவுற்றது.இதனை அடுத்து, நேற்று மாலையே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாச 6 லட்சத்து 91 ஆயிரத்து 998 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
அவருக்கு அடுத்தபடியாக, பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் இலங்கை முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும்,அந்நாட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்ச 5 லட்சத்து 91 ஆயிரத்து 151 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.இன்று மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, நடக்கும் இந்தத் தேர்தல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்நாட்டில் கருதப்படுகிறது.