மேலும், ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார். அங்கு, அவருடைய அண்ணன் ராஜ்குமார், தட்சினேஸ்வர் காளி கோயிலில் ஒரு புரோகிதராக வேலைப் பார்த்து வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்த ராமகிருஷ்ணர், ராஜ்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.
தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்கு, அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டு, ‘தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுள் என்று’ நினைத்த அவர், ‘காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்தார். எனினும் தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்த அவர், காளியின் கையில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில், தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னர் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இவருடைய நடவடிக்கைகளைக் கண்ட ராமகிருஷ்ணரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன் விளைவாக காமர்புகூர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும், அப்பெண்ணே தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறி, அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும், பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர், தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்து, தெய்வீக வாழ்வு நடத்தினார்.
பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர், பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார். இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்றில்லாமல், மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்ல, பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார். பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார்.
மேலும், பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தியோடு இருப்பது என்றும், அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார்.
அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். இருந்தாலும், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், இந்தியாவில் வாழ்ந்த “ஒப்பற்ற மனித தெய்வம்” ஆவார். இயற்கைப் பேரறிவும், செயற்கைப் பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர், இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.