இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் 12 மணி நேரம் மின்இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. மேலும் பன்னாட்டு பண நிதியத்தில் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் உள்ள இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொருளாதாரச் சிக்கலுக்கு தீர்வு காணும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் இலங்கை மேலும் கடன் உதவி கேட்பதற்கு அந்நாட்டு நிதியமைச்சர் அலி சாப்ரி, மைய வங்கி தலைவர் நந்தலால் வீரசிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமெரிக்கா சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து வாஷிங்டனில் ஐஎம்எஃப் அதிகாரிகளுடன் நாளை முதல் 5 நாட்களுக்கு இலங்கைக் குழு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரியவந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகளிடம் இலங்கை மேலும் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி கேட்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடம் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய வங்கிகளிடமும் இலங்கை கூடுதல் நிதி உதவி கோர பேசி வருகிறது. அந்த வகையில் வாஷிங்டனில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை நீதி அமைச்சர் அலி சாப்ரியை சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் பேசுகையில் தற்போது ஏற்பட்டு வரும் பொருளாதார சூழல், அதனை எதிர்கொள்ள இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போன்றவற்றை பற்றி பேசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை நிதித்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில். ‘அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்கிற வகையில் இயன்ற அனைத்து ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்க இந்தியா முயற்சிக்கும்’ என்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாக” தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இலங்கை ஏற்கனவே மூன்று லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு கடல் பாக்கி வைத்துள்ளதாகவும் இப்போதைக்கு திருப்பித் தர முடியாது என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.