இந்திய நாட்டிற்கான இலங்கை தூதர், அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன நாட்டைச் சேர்ந்த உளவுக்கப்பல் நிறுத்தப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
சீன நாட்டை சேர்ந்த உளவு கப்பலான யுவான் வாங் 5-ஐ, அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியது. இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதனை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை அந்த கப்பலை துறைமுகத்தில் நிறுத்தினர்.
இதனால், இந்திய அரசு இலங்கை மீது அதிருப்தி அடைந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பில் இந்தியாவிற்கான இலங்கை தூதராக இருக்கும் மிலிண்டா மொரகொடா தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேறிய சமயத்தில் குழப்பமான நிலை இருந்தது.
அப்போது, சீன நாட்டின் உளவு கப்பலை நிறுத்த அனுமதி வழங்கும் தீர்மானத்தை அதிகாரிகள் எடுத்தனர். இந்த தீர்விற்கு அரசியல் தலையீடு கிடையாது. இதில், நாங்கள் தெரிந்து கொண்டது என்னவெனில், இந்திய நாட்டுடன் அதிக நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எங்களுக்கு ஒத்துழைப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்காக பணி புரிந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.