சர்வதேச ஊடகங்களில் வெளியான இலங்கையில் கடுமையான உணவுபஞ்சம் உண்டாகும் என்று வெளியான செய்தியை இலங்கை அரசு மறுத்துள்ளது.
இலங்கையில், கடந்த சில வருடங்களாக பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காரணமாக நாட்டின் முக்கிய வருவாய் துறையான சுற்றுலா முடக்கப்பட்டது. எனவே, உணவு பொருட்கள் உட்பட முக்கியமான பொருட்களை, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் உருவானது. மேலும் நாட்டில் இருப்பு குறைந்தது. எனவே உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது.
இதனைத்தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே, உணவு பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை தடுப்பதற்காகவும், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், நாட்டில் பொருளாதார அவசர நிலையை சமீபத்தில் பிறப்பித்திருந்தார். எனவே, சர்க்கரை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை நியாயமாக இருக்கும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச ஊடகங்களில் சமீபத்தில் இலங்கையில் கடுமையான உணவுப் பஞ்சம் உண்டாகும் என்று செய்தி வெளிவரத்தொடங்கியது. மேலும், சீன நாட்டுடன் கடன் சுமை ஏற்பட்டிருப்பதால், இலங்கையின் பொருளாதாரமும் அதிகமாக பாதிப்படையும் என்றும் கூறப்பட்டது.
இதனை, இலங்கை நிதித்துறை இணை அமைச்சரான, அஜித் நிவார்ட் கப்ரால் முற்றிலுமாக மறுத்திருக்கிறார். இது தொடர்பில், பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியபோது, மக்களுக்கு தேவைப்படும் உணவு பொருட்கள் தங்களிடம் இருப்பதாகவும், ஊடகங்களில் வெளியான செய்தியை இலங்கை அரசு மறுப்பதாகவும் கூறியிருக்கிறார்.