இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டின் அனைத்து மக்களுக்கும் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனினும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே, ஊரடங்கு அமல்படுத்த மறுத்து வந்தார். இறுதியில் புத்த மத குருக்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கொடுத்த அழுத்தத்தினால் இம்மாதம் 30ஆம் தேதி வரை பத்து தினங்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாட்டு மக்களுடன் அதிபர் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, கொரோனாவை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், வருங்காலத்திலும் அதிக நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்கள் அதிக தியாகங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றார். மேலும், அவர் கூறுகையில், தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். கொரோனாவால், பலியானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 60 வயது முதியவர்கள் தான்.
அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக தடுப்பூசிகள் அதிகளவில் பெறப்பட்டு வருகிறது. உலக அளவில் அதிக தடுப்பூசி செலுத்தி கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. இம்மாதம் 31ம் தேதிக்கு முன்பாக 81%-க்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். அடுத்த மாதம் பத்தாம் தேதி முடிவடைவதற்குள் அனைத்து மக்களுக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.