இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஐந்து பில்லியன் டாலர்கள் நாட்டிற்கு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவிற்காக திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தியதால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது அவர், பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைகளை நிறைவேற்ற அதிக நிதியுதவி தேவைப்படுவதாக கூறியிருக்கிறார்.
இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஐந்து பில்லியன் டாலர் நிதி உதவி வேண்டும். பொருளாதார நிலையை சரிப்படுத்துவது மட்டும் தீர்வை தராது. மீண்டும் பழைய நிலைக்கு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். அந்நியச்செலவாணிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறார்.