இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் அதிகாரத்தை குறைப்பதற்கான மசோதா இழுபறியில் இருப்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள். எனவே, 21 -ஆம் அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மசோதா மந்திரிசபையின் அனுமதிக்காக நேற்று வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அதிபரின் பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த மசோதாவை ஏற்க மாட்டோம் எனவும் முதலில் அட்டார்னி ஜெனரல் அனுமதி வழங்கிய பின்பு தான் மந்திரிசபைக்கு வர வேண்டும் என்றும் கூறிவிட்டனர். எனவே, இந்த மசோதா நேற்று மந்திரிசபையில் பரிசீலனை செய்யப்படவில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபரின் அதிகாரத்தை குறைக்கக்கூடிய மசோதாவிற்கு அவருடன் ஒப்பந்தம் செய்த பின்பு தான் பதவிக்கு வந்தார். எனவே, இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.