இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே, ரஷ்ய அதிபர் புடினிடம் எரிபொருள் இறக்குமதிக்காக நிதி உதவி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி ஒவ்வொரு நாளும் பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடும் அங்கு கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசு சர்வதேச நாடுகளிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியா, இலங்கைக்கு இதற்கு முன்பே நிதி உதவி மற்றும் எரிபொருட்களை அளித்திருக்கிறது. எனினும், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை. தற்போது, இலங்கை அதிபர் பல நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார். அதன்படி நேற்று ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடினிடம், கச்சா எண்ணையை மாஸ்கோவில் இருந்து இறக்குமதி செய்வதற்காக நிதி உதவி அளிக்குமாறு கேட்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, அதிபர் கோட்டபாய ராஜபக்சே, புடினிடம் நடந்த பேச்சுவார்த்தை பலனுள்ளதாக அமைந்தது என்று தெரிவித்திருக்கிறார். வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இரண்டு தரப்பு உறவுகளையும் மேம்படுத்த இருவரும் முடிவு எடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.