தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் அரசு போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லையில் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் அளவிலான மேல்நிலை தேர்வு வரும் பிப்ரவரி 6ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வானது நெல்லை மாவட்டத்திலுள்ள பாளை ரஹ்மத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற இருக்கிறது.
இத்தேர்வு தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த தேர்வினை 213 பேர் எழுத இருக்கிறார்கள். இந்த தேர்வு நடைபெறும் நாளில் கல்வி நிலையத்திற்கு காவல்துறையினர் மூலம் தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தவும், மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தயார் நிலையில் வைக்கவும் அந்தந்த துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இத்தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு அறையில் செல்போன்களை எடுத்து செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் தேர்வு நடைபெறும் நாளில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், கூடுதலான பேருந்துகள் இயக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மையத்துக்குள் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் கொரோனா பரவல் இருக்கும் சூழலில் இத்தேர்வினை எழுத வரும் அனைத்து தேர்வர்களும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.