விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைராஜ், தன் மனைவியின் அக்காள் மகளான மாதுவையும் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த ஐந்து சவரன் நகைகளுடன் மாது மாயமாகியுள்ளார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மாது பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் துரைராஜ் மாதுவின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அடுத்த வி.எஸ்.கே நகரில் மாது தங்கியிருப்பதாகவும், தினமும் காலையில் அங்கிருக்கும் பேருந்து நிலையத்திற்கு வருவதாகவும் துரைராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்த தகவலின்படி புதன்கிழமை இரவு ராஜபாளையத்திலிருந்து புறப்பட்ட துரைராஜ், கோவைக்குச் சென்று வி.எஸ்.கே நகர் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்துள்ளார். காலையில் பேருந்து நிலையத்திற்கு வந்த மாதுவைக் கண்ட அவர், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் அவரது தோள்பட்டை, கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தப்பியோடிய துரை ராஜை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல் துறையினர் துரைராஜை கைது செய்தனர். கத்தியால் குத்துபட்ட மாது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், காவல் துறையினர், துரைராஜை அழைத்துச் சென்ற போது சாவகாசமாக நடந்தவற்றை செல்போன் மூலம் தனது மனைவியிடம் தெரிவித்தார். அதில் “துரோகம் செய்தால் பரவாயில்லை. நம்பிக்கை துரோகம் செய்ததால் இது தான் கதி” எனக் கூறியது அங்கிருந்தவர்களை அதிர வைத்தது.