அமெரிக்காவின் வாஷிங்டனில் சிம்பன்சி குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஈரானில் 988 பேரும் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.’
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனில் இருக்கும் சிம்பன்சி குரங்குகளுக்கான சரணாலயத்தில் உள்ள குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அங்கிருக்கும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வாஷிங்டனில் காஸ்கேட் மலைப்பகுதியில் உள்ள சரணாலயத்தில் இருக்கும் 10 சிம்பன்சி குரங்குகளும் அறிவியல் ஆராய்ச்சிக்காக முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தன.
ஐவரிகோஸ்டில் 2016 ஆம் ஆண்டில் மனிதர்களிடமிருந்து சிம்பன்சி குரங்குகளுக்கு வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்போது போல தற்போது நடந்து விடக்கூடாது என்பதற்காக, கொரோனாவால் சிம்பன்சிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அதை தினமும் சுத்தப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.