அன்னசாகரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை முன் மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழைக் காரணமாக இப்பள்ளியில் உள்ள வகுப்பறை முன் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் வகுப்பறைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில்தான் நடந்து செல்லவேண்டியிருக்கிறது.மேலும் மழைநீரில் உருவாகும் கொசுக்களால் பள்ளி மாணவ மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டள்ளது. ஏற்கனவே கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதனைக் கருத்தில்கொண்டு பள்ளியில் உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.