தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நிலை குறித்து தமிழக முதல்வர் மௌனம் களைக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போதைய சூழ்நிலைக்கு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற கல்லூரி மாணவர்களின் தேர்வையும் ரத்து செய்து தமிழக முதல்வர் அறிவித்தார்.
குறிப்பாக, அரியர் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தி இருந்தால், அவர்கள் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்தார். ஆனால் பல மாணவர்கள் கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கு சூழ்நிலையில் கல்வி கட்டணத்தை செலுத்தாமல் இருந்ததால் அவர்களின் நிலை குறித்து தமிழக முதல்வர் யோசிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கக்கோரி தான் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக முதல்வர் மௌனம் களைக்க வேண்டும் என ஸ்டாலின் தற்போது ட்விட் செய்துள்ளார். மேலும் செமஸ்டர் கட்டணம் செலுத்த மூன்று நாள், ஏழு நாள் கெடு விடுத்திருக்கும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, அவகாசத்தையும் இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.