சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 நாட்கள் திமுக கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெ.அன்பழகன் இறந்த செய்தி இதயத்தில், இடியும், மின்னலும் ஒருசேர இறங்கியது போல் இருந்தது என வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜெ.அன்பழகன் இறந்துவிட்டார் என்ற செய்தியை மனம் ஏற்க மறுக்கிறது என தெரிவித்துள்ளார். உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாத செயல்பட்டவர் ஜெ.அன்பழகன் என புகழாரம் சூட்டியுள்ளார். மனதில் பட்டத்தை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை கொண்டவர் ஜெ.அன்பழகன் என தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.