தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் என முக. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனோ வைரஸ் இருப்பதை ஆரம்பக்கட்டத்திலேயே அதிவிரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவில் இருந்து டெல்லிக்கு கருவிகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 24,000 கருவிகள் நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த கருவிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதல்முறையாக சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் எத்தனை வந்துள்ளது? என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கருவிகளை வாங்கிய விலை, எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ள்ளார்.
மேலும் சத்ததீஷ்கர் மாநிலத்தில் கருவிகள் வாங்கிய விவரத்தை அம்மாநில அரசு வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சத்தீஷ்கர் மாநிலத்தை போல தமிழக அரசும் பரிசோதனை கருவிகள் வாங்கிய விவரத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் நாடே உயிருக்காக போராடி வரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.