வெற்றுக்கதைகளை பேசி, சிறுபிள்ளைத்தனமாக கொரோனா வழியாகவாவது ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின் என தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதை கண்டு மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்தும், இறந்தோர் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது என கூறியுள்ளார். நேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் செய்யாமல், விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும் ஆக்கபூர்வமான நிவாரணங்களை கொடுக்காமல் அலங்கார பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என மத்திய பாஜக அரசு நினைத்து கொண்டிருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.5000, நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் பாண்டியராஜன் தமிழகத்தில் கொரோனா வழியாகவாவது ஆட்சியை பிடிக்கலாம் என ஸ்டாலின் நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.