விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆனால், தமிழ்நாடே எதிர்பார்த்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக அபார வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவைத் தேர்தல் வேறு என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
சிலர் இன்று அரசியலுக்கு வர ஆசைப்படுகின்றனர். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான். 67 ஆண்டுகளாக வேறு தொழில் செய்த சிலர் அரசியலுக்கு வர நினைக்கின்றனர். இவர்கள் பாதி நாட்கள் நாட்டிலும், மற்ற நாட்கள் வெளிநாட்டிலும்தான் இருப்பார்கள். அவர்கள் அரசியலையும் தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பலமான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றியே முன்னோட்டம். தமிழ்நாடு அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களைத் தூண்டிக்கொண்டுள்ளார் ஸ்டாலின். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர்” என்றார்.