மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இச்சட்டதிருத்தத்திற்கு எதிராக தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, NO TO CAA என்று எழுதியிருந்தனர். அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகர் காவல் துறையினர் கோலம் போட்டுக் கொண்டிருந்த நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேரை குண்டுக்கட்டாக தூக்கிக் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாகக் கூறிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/MKStalin/posts/1439347776225088