செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது
முதலமைச்சர் இதில் தலையிட வேண்டும், ஏனென்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் தான் நிலத்தை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டு இருக்கிறார். NLC இந்தியா என்பது இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனம், ஆனால் நிலத்தை கையகப்படுத்துகின்ற பணிகளை தமிழ்நாடு அரசின் ஆட்சி நிர்வாகம் தான், மாவட்ட ஆட்சி நிர்வாகம் தான் மேற்கொள்கிறது. எனவே நிலத்தை கையகப்படுத்துகின்ற பணியை தமிழ்நாடு அரசு செய்கின்ற சூழலில் இதில் முதலமைச்சருக்கும் கணிசமான அளவில் பங்கு இருக்க வேண்டும், அவர் தலையிட வேண்டிய தேவை இருக்கிறது.
ஆகவே அவருடைய கவனத்திற்கு கீழ் நாங்கள் எடுத்துச் செல்வோம், முடிந்தால் நேரடியாக சந்தித்து நாங்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் ஒருங்கிணைந்து முதலமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு போய் சேர்ப்போம். முதலமைச்சருக்கு கவனத்தை இருக்கின்ற வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். கட்டாயமாக இந்த பிரச்சனை மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்ற சூழலில், இதனை நாம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
மாற்று குடியிருப்பு எல்லாம் தயார் செய்து வைத்து விட்டு தான் வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால் மாற்று இடம் எதுவுமே தராமல், கோர்ட் நெருக்கடி இருக்கிறது, இந்திய ஒன்றிய அரசின் நெருக்கடி இருக்கிறது. உடனே வீட்டை காலி பண்ணுங்கள், நாங்கள் இடித்து தரையில் மட்டமாக்க போகிறோம் இடத்தை தர வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிகாரிகள் அவர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளை பின்பற்றாமல், மக்களை கையாளுகிறார்கள், அது தவறு. ஆகவே தான் முதல்வருடைய தலையீடு இதில் அவசியம் தேவைப்படுகிறது. முதல்வர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உரிய வழிகாட்டுதல் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.