தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்றது. இதன் 9ஆம் திருவிழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு விடுமுறை நாள்களில் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்றுதான். அதற்கு மேலேயும் காட்சிகள் திரையிட வேண்டுமென்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
பல்வேறு சோதனைகள் வந்தபோதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சாதனை படைத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பல்வேறு சரித்திர சாதனைகளைச் செய்துள்ளோம். மக்களவைத் தேர்தலின்போது திமுக நடைமுறைப்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. அதனை நம்பி மக்கள் ஏமாந்தார்கள்.
சதுரங்க வேட்டை படத்தைப் போன்று ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தாலும், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து ஆட்சியைத் தொடர மக்கள் ஆதரவளித்துள்ளனர்.ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் கூறிவந்த நிலையில், அதிமுகவின் இடைத்தேர்தல் வெற்றி ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.