திமுக வெற்றிபெற்ற நிலையில் நேற்று நள்ளிரவு மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், நடைபெற்று முடிந்து இருக்கக்கூடிய சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, தமிழகத்து மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.
இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கக்கூடிய அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 10 ஆண்டு காலமாக தமிழகம் பாதாளத்திற்கு போயிருக்கிறது என்பது நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு, அதை சரி செய்ய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கக் கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு, மிகப்பெரிய ஆதரவை, மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்.
எந்த எதிர்பார்ப்போடு அந்த வெற்றியை தந்து இருக்கிறீர்களோ, எந்த நம்பிக்கையோடு எங்களிடத்தில் இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறீர்களோ, அந்த நம்பிக்கைக்கு ஏற்றவகையில் அந்த பொறுப்பை உணர்ந்து எங்களுடைய ஆட்சி நிச்சயம் அதை நிறைவேற்றித் தரும் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.