இப்போது கமரகட்டு கொடுத்து ஏமாத்தி விட்டோம் என்று சொல்வார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தல் திமுக வெற்றி குறித்து திமுக. தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இது ஜனநாயகத்துக்கான வெற்றியாக அமைந்து இருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அணி என்பது ஒரு தொகுதியை தவிர்த்து புதுச்சேரி உள்ளிட்ட 38 இடங்களில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது.இந்த வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் சதியின் காரணமாக ஆளுங்கட்சியாக மாநில அரசும் , மத்தியில் இருந்த பிஜேபியும் தமிழகத்தில் உள்ள தேர்தல் ஆணையம் , வருமான வரி துணையோடு தேர்தலை திட்டமிட்டு நிறுத்தி வைத்தார்கள்.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேர்தலில் திமுக மீண்டும் போட்டியிட்டு வெற்றியை பெற்றிருக்கிறது. வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி என்பது ஒரு முழுமையான வெற்றியாக அமைந்து இருக்கிறது என்று நாங்கள் மிகுந்த பெருமைப்படுகிறோம். மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி மாநிலத்தில் இருக்க கூடிய ஆட்சியுடன் கூட்டணி அமைத்து அதிகார பலத்தையும் , பணபலத்தையும் மீறி திமுக வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நேரத்தில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த்_துக்கும், திமுக வெற்றிக்கு துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முன்னோடிகள் , நிர்வாகிகள் , கூட்டணிக் கட்சிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் , குறிப்பாக வாக்களித்திருக்கும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பெருமக்கள் அத்துணை பேருக்கும் திமுக சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியையும் , வணக்கத்தையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வெற்றியை கமரகட்டு கொடுத்து ஏமாத்துறாங்க என்று சொல்வார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.