திமுக தலைவர் முக.ஸ்டாலின் வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றுவது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது:
கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மூன்று மாதமாக எதிர்க்கட்சியின் கடுமையான அரசியல் வார்த்தை போரை ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்து, பலமுறை பதிலளித்து கொரோனா யுத்தத்தை தமிழக அரசு நடத்திக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் திமுக விமர்சனம் தெரிவித்தது. இது சரியில்லை, அது சரியில்லை, இதை இப்படி செய்யுங்க, அதை அப்படி செய்யுங்க, இதை செய்யாதீங்க, இதை உடனே செய்யுங்கள் என நீண்டது விமர்சனம்.
அடுக்கிய விமர்சனம்:
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் ஊரடங்கு தளர்வு கொடுத்தது வரை…. பள்ளிகள் அடைக்கப்பட்டது முதல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது வரை…. ரேஷனில் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது முதல் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்ட வரை….. பரிசோதனை மேற்கொள்வது முதல் மருத்துவ உபகரணம் வாங்கியது வரை…. என அதிமுக மீது திமுக விமர்சனங்களை அடிக்கிக் கொண்டே சென்றது.
அசராத அதிமுக:
ஆளும் அதிமுகவும் திமுகவின் விமர்சனகளுக்கு அசராமல் பதில் அளித்து வந்தது. ஒரு கட்டத்தில் வெறுத்து போன அதிமுக அரசு, எதிர்க்கட்சி இப்படி எல்லாம் செய்யலாமா ? தேடித்தேடி குறையை கண்டுபிடிக்கலாமா ? அரசு இயந்திரம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இப்படி குறை சொல்வதால் என்ன ஆகப்போகின்றது ? என்றெல்லாம் கூறியது. முதலமைச்சர், அமைச்சர்கள் என மாறி மாறி ”இப்படி செய்யாதீங்க” என திமுகவை விமர்சித்து வந்தாலும் திமுக மக்களுக்காக குறைகளை சொல்லிக்கொண்டே சென்று அதில் வெற்றியும் கண்டது.
ட்விட் போடும் ஸ்டாலின்:
அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கவேண்டும் என்று முக ஸ்டாலின் ட்விட் போட்டார், தமிழக அரசின் சார்பில் அதிமுக அனைத்து மாவட்ட அம்மா உணவகத்திலும் உணவுக்கு கட்டணத்தை செலுத்தியது. ரேபிட் டெஸ்ட் கிட்டில் முறைகேடு நடந்துள்ளது, அதன் விலை என்ன? என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்விட் போட்டார், விலைகளின் பட்டியலை தமிழக அரசு பொத்து பொத்து என்று போட்டது. கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது, கணக்கு தவறாக காட்டுகிறார்கள் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு ட்விட் போட்டார் அடுத்த நாளே அதற்கான மொத்த விளக்கமும் கொடுக்கப்பட்டது.
நிறைவேற்றும் அதிமுக:
எதிர்க்கட்சியான நாங்கள் மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம். அரசு செயல்படவில்லை என்றாலும் தமிழக அரசை எதிர் கட்சி செயல்பட வைக்கும் என்றெல்லாம் தன் பக்கம் நியாயத்தை நிலை நிறுத்தி விமர்சித்துக் கொண்டே இருந்தது. அந்த வகையில்தான் நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு ட்வீட் செய்தார். அதற்கு உடனடி தீர்வாக தமிழக அரசும் சரி செய்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
மருத்துவர்கள் போராட்டம்:
செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு கேட்டும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் என்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு நாளை கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்கள். இதற்க்கு முக.ஸ்டாலின், மக்களை காப்பாற்றும் மகத்தான பணியில் இருப்போரையும் போராடும் நிலைமையில் அரசு வைத்திருப்பது வேதனை தருகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
அரசு பேச்சவார்த்தை:
அதே போல கூட்டமைப்பினரை அழைத்து அரசு உடனடியாக பேசி, கோரிக்கைகளுக்குச் செவி மடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அரசு சார்பில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்க கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மருத்துவர்கள், நர்ஸ்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு அறிவித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று கூட்டமைப்பு அறிவித்தது. இது திமுக சொன்னதை போல அரசை செயல்பட வைப்போம் என்பதை காட்டுவதாக திமுகவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.