கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொரோனாவின் ஒட்டுமொத்த பேரழிவிற்கு முதல்வர் எடப்பாடி பழனி்சாமி தான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன், மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைகளையும் தெரிவித்தேன், யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை நான் கூறவில்லை என சொல்கிறார், முதலமைச்சர், என்னுடைய அறிக்கைகள் அனைத்தும் ஆலோசனை கூறும் வகையில் உள்ளன என விளக்கம் அளித்த அவர்,
மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க கோரிக்கை விடுத்தது யார்?, மின்கட்டண சலுகை அளிக்க வேண்டும் என குரல் கொடுத்தது யார்?, மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஊரடங்கில் தளர்வு அறிவித்து, தவறு செய்தது அரசு என தெரிவித்த ஸ்டாலின், மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் என்கிறார் முதலமைச்சர், அதிக மக்கள் நெருக்கம் உள்ள மும்பை தாராவியில் கூட கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.