உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர்.
இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக அரசு இந்த உணவு பொருட்களை நேரடியாக யாரும் வழங்கக்கூடாது என தன்னார்வலர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது இயற்கை பேரிடர் போன்ற நிலையை விட மிகவும் ஆபத்தான பேரிடராக கொரோனா உள்ளது.
ஒரு தன்னார்வலர் உணவு வழங்க சென்றால் அதை வாங்க மக்கள் கூட்டமாக கூடுகிறார்கள் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் போதும் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உணவு விநியோகிக்கும் 48 மணி நேரத்திற்கு முன்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், நிவாரண உதவிகள் வழங்க ஓட்டுனருடன் 3 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பேரிடரின் போது உதவும் கரங்களின் முக்கியத்துவமும், மனிதாபிமானமும் போற்றப்பட்டுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.