உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வரலாறு காணாத கடனை மக்கள் தலையில் சுமத்தி நிதிப் பகிர்விலும் உரிமை இழந்த அரசு என தமிழக அரசை மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
15வது நிதிக்குழு பரிந்துரையால் இழைக்கப்பட்டுள்ள துரோகத்தை மறைக்க முயற்சி செய்வதாகவும், தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை மறைக்கவே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்னை விமர்சித்துள்ளார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் துணை முதல்வர் தனது நிலையை நினைத்து அறிக்கை விட்டதை எண்ணி வருந்துகிறேன் என கூறிய ஸ்டாலின்,
தமிழ்நாட்டின் உரிமைகளை ஓங்கிக் குரல் கொடுத்துக் காப்பாற்ற முன்வராவிட்டாலும், இப்படி அழைக்காமலே சென்று, உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்துக் கைபிசைந்து நிற்கும் காட்சி கண்டு, பரிதாபத்தால் மனம் கலங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் நிதி உரிமை, நதிநீர் உரிமை, கல்வி உரிமை என்று மாநிலத்தின் எந்த உரிமையாக இருந்தாலும் அதை திமுக மட்டுமே நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்று குரல் எழுப்பி சாதித்துக் காட்டியிருக்கிறது. இதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. நிதி அமைச்சருக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம், அல்லது தெரியாதது போல அவர் பாவனை செய்யலாம்! என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.