அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு, நாம் அனைவரும் கண்டும் கேட்டிராத, எவராலும் கற்பனை கூட செய்ய முடியாத பாதிப்பு என கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் 3ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை 2 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 1,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு உத்தரவிட்ட ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்கக்கோரி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.