திமுக ஒரு குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
திமுக மீது பல வருடங்களாக அனைத்து கட்சியினரால் வைக்கப்படும் முதன்மையான விமர்சனங்களில் ஒன்று குடும்பத்தோடு அரசியல் செய்கிறார்கள் என்பதுதான். மறைந்த கலைஞர் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வழியில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இளைஞர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் வார்டு கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின் குடும்ப அரசியல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.
அதாவது, “குடும்பத்தை கட்சியோடு இணைத்து கட்சிக்காக நான் பாடுகிறேன். நான் நேரடியாக அரசியலுக்கு வந்தவன் கிடையாது சிறுவயதிலிருந்து கட்சி உணர்வோடு பதவிக்கு வந்தவன்” என்று குடும்ப கட்சி என்ற புகாருக்கு திமுக தலைவர் பதிலளித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அரசு அனுமதி வழங்கப்படாத நிலையில் கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே திமுகவின் கிராமசபை கூட்டங்கள் இனிமேல் “மக்கள் கிராமசபை கூட்டம்” என்ற பெயரில் நடத்தப்படும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.