சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் இது குறித்து கூறுகையில்,
சிதம்பரம் அவர்களின் கைது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது என்று அவர் தெரிவித்தார். மேலும் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுவரை தெளிவான கண்டனத்தை தெரிவிக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது உடனடியாக தலைவர் சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். ஆனால் ஸ்டாலின் தற்பொழுது வரை தெளிவான கண்டனத்தை தெரிவிக்காமல் இருப்பது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.