ஊரடங்கு 5.0 காலத்திலாவது கொரோனாவை தடுத்து மக்களை காப்பாற்றுக என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,
தமிழகத்தில் கொரோனா :
தமிழகத்தில் 22 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது.
தினமும் 500 – 1000 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்படுகின்றது. சுமார் 50 சதவீதம் பேர் இன்னமும் சிகிச்சையில் இருக்கின்றார்கள்.
இதுவரை 173 குடும்பங்களில் ஓர் உயிரை இழந்து பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
எடப்பாடியின் பாட்டுகள்:
கொரோனாவே தமிழகத்தில் இல்லை என்றவர்கள்; பிறகு தமிழகத்திற்குள் வராது; வந்தாலும் காக்கும் சக்தி இருக்கிறது; ஒரு உயிர் கூட போகாது; என்றெல்லாம் சொல்லி இப்போது ”உயிரிழப்புகள் குறைவு” என்கிறார்கள்.
நம்மை விட பாஜக ஆளும் குஜராத் நிலைமை படுமோசம் என்று வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி பெருமைப்படலாம்! அதுவும் அவரால் முடியாது; குஜராத் முன்னாள் முதலமைச்சர் கோபம் கொள்வாரே!
முதல் நோயாளி அடையாளம் காணப்பட்ட பிப்ரவரி 7 முதல் மார்ச் 24 வரையில் எடப்பாடி பழனிசாமி மாய்மாலங்களில் ஈடுபட்டதன் விளைவு தான் இவ்வளவு பெரும் பாதிப்பு.
தனிமனிதன் அலட்சியம், கையாலாகாத தனம், பொறுப்பின்மை மக்கள் பெரிய விலை கொடுத்து உள்ளார்கள்.
அதிமுக ஆட்சியின் லட்சணம்:
திமுகவிடம் மக்கள் முன் வைத்த கோரிக்கைகளில் அரசாங்கம் செய்ய வேண்டியவற்றை பிரித்து மனுக்களாக கொடுத்தால் ஒரு லட்சம் மனுக்கள் இல்லை – 98 ஆயிரத்து 752 மனுக்கள் தான் இருந்தன என்கிறார் ரூபாய் 300 கோடி ஊழல் மருத்துவமனை புகழ் அமைச்சர்
தமிழ் நாட்டில் பசி பட்டினியே இல்லை என்று முதலமைச்சர் சொல்லிக்கொண்டிருக்க 98 ஆயிரத்து 752 பேர் உணவு தேவைக்காக மனுக் கொடுக்கிறார்கள் என்றால் எந்த லட்சணத்தில் ஆட்சி நடக்கிறது ?
மக்களுக்கு எங்களால் எதுவும் தர முடியாது, ஊரைத் திறந்து விடுகிறோம் நீங்களே உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்பதை சொல்லாமல் சொல்லி கடமையிலிருந்து கழன்று கொள்ள எத்தனிக்கிறார் முதலமைச்சர்.
பரிசோதனை கருவிகள் எங்கே ?
மாவட்ட ஆட்சித்தலைவர் காணொளியை ஆலோசனையில் 9.14 லட்சம் பி.சி.ஆர் ஆய்வு உபகரணங்கள் வரப் பெற்றதாகவும் அதில் 1.76 லட்சம் கையிருப்பு இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருந்தார்.
அன்றைய தினம் வரைக்கும் பரிசோதனை பிசிஆர் உபகரணங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 550
எனில் மீதி கையிருப்பு இருக்க வேண்டிய உபகரணங்கள் 4 லட்சத்து 47 ஆயிரத்து 450 இல்லையா ?
ஆனால் முதல்வரின் கூற்றுப்படி 1.76 லட்சம் உபகரணங்கள் தான் கையிருப்பு என்றால் மீதி 2 லட்சத்து 71 ஆயிரத்து 450 உபகரணம் எங்கே ?
கையிருப்பில் உள்ள உபகரணங்கள் எண்ணிக்கை தவறா ? அல்லது பரிசோதனை செய்ததாக கொடுக்கப்பட்ட எண்ணிக்கை தவறா ?
மாவட்ட வாரியாக பரிசோதனை டெஸ்ட் கிட் விவரங்களை வெளியிடுவதில் அதிமுக அரசுக்கு ஏன் இந்த ”மயான அமைதி”?
வெண்டிலேட்டர் கொள்முதல் குளறுபடிகள்:
கொரோனா பேரிடர் காலத்தில் வாங்கியுள்ள வெண்டிலேட்டர் வெறும் 560 தான்!
சென்னையில் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6781 பேர் இறந்தவர்கள், 129 பேர்.
ஒருவர் கூட உயிர் இழக்க இந்த அரசு அனுமதிக்காது என்று கூறிய அரசுக்கு வெண்டிலட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம் ? படுக்கைகள் உருவாக்குவதில் இன்னமும் கூட மெத்தனம் ?
அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தை “தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும்” விளம்பரத்திற்காக வீணடிக்காமல், ஜூன் மாதத்தையாவது உண்மையான மக்கள் விசுவாசத்துடன் முறையாக பயன்படுத்திக் கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். அதைவிடுத்து அதிமுகவுக்குள் குழு அரசியல் நடத்த ஒவ்வொரு அமைச்சராக இறங்கிவிட்டு எதிர்கட்சிகளை ஏசவும் பேசவும் செய்வதால் எவ்வித பயனும் ஏற்படாது என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.