10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக வரவேற்பு அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை மனப்பூர்வமாக வரவேற்பதாக திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணி காட்சிகள் சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னரே தேர்வு ரத்து முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன உளைச்சலை தவிர்த்து இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து 9 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி, அந்த தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அதிமுக அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 5.80 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்துள்ளோம் என்றும், 33,229 பேர் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், மேலும் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்திற்கு செல்லும் என்று அரசே அறிவித்தும் கூட மாணவர்களின் பாதுகாப்பு தேர்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் பாதுகாப்பு, மாணவர்களின் பெற்றோர்கள் பாதுகாப்பு குறித்த எவ்வித கவலையும் இல்லாமல் ஜூன் 15ம் தேதி தேர்வை நடத்துவோம் என்று பிடிவாதமாக மீண்டும் அறிவித்தார்கள்.
இதை தொடர்ந்து திமுக சார்பிலும் அனைத்து கட்சிகளின் சார்பிலும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சேனை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி தேர்வினை ரத்து செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.