கொரோனா வைரஸ் பரவி வரும்நிலையில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் சீனாவில் உள்ள தனது 2,000 கிளைகளை மூடியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரையில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் 4, 292 கிளைகளை கொண்டுள்ள அமெரிக்க கார்பரேட் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் (Starbucks), அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக 50 சதவீத கடைகளை மூடியுள்ளது. கடையை மூடியது குறித்து ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, நோய் பரவி வருவதை தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டும் கடைகளை நாங்கள் மூடியுள்ளோம் என தெரிவித்துள்ளது. ஆனால் அந்நிறுவனம் பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.