உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
உலக கோப்பை இரண்டாவது அரை இறுதியில் நேற்று ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின. பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 46 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 39 ரன்களில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அதிரடியாக ஆடி வந்த ஜேசன் ராய் 5 சிக்ஸர் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோ ரூட்டும், இயான் மோர்கனும் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இங்கிலாந்து அணி 32.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. ஜோ ரூட் 49 ரன்களும், மோர்கன் 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகாலமாக உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றையும் மாற்றியுள்ளது.
இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது அவர் நடப்பு உலக கோப்பையில் 27 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத் முதலிடத்தில் இருந்தார். அவர் 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 26 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இதுவே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையை மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் தகர்த்துள்ளார்.