வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில் தமிழகத்திலும் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தை மக்கள் மிக விமர்சையாக கொண்டாடி வரும் சூழ்நிலையில் தமிழகத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு நடனமாடியும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர். ஜிங்கிள் பெல்ஸ் என்ற பாடலுக்கு குழந்தைகள் நடனமாடியது பெற்றோர்களை கவர்ந்தது.
சென்னை குரோம்பேட்டை கிறிஸ்தவ சபையில் வில்லுப்பாட்டு மூலம் கிறிஸ்துவின் பிறப்பை பாடல்களுடனும் நடனம் மற்றும் நாடகம் நடத்தியும் கொண்டாடினர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திருவை ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி பாட்டுப் போட்டி நடனப்போட்டி என கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதேபோல தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள மாணவர்கள் நாடகமாடியும் நடனமிட்டும் கொண்டாடி மகிழ்ந்தனர்.