குடியாத்தம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் சேப்பாக்கம் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர் சேப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இது குறித்துப் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ, ”கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.