ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க ஏப்., 14ம் தேதி வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
குறிப்பாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க தேவைப்படும் கச்சா பொருட்களும் போதுமான அளவு தயாரிப்பாளர்களுக்கு கிடைப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கொரோனா பரிசோதனை, தொற்று உள்ளவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதுல், மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல் போன்றவை அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் அவசியம், எனவே அதில் முழுகவனம் செலுத்த வேண்டும் என மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.