பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இ பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது. ஆன்லைனில் இ-பாஸ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி நாம் பார்ப்போம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. எனவே ஆன்லைனில் நாம் எப்படி இ- பாஸ் அப்ளை செய்வது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
எப்படி விண்ணப்பிப்பது:
கடந்த ஆண்டு போலத்தான் இப்போதும் இ-பாஸ் எடுக்கும் முறை இருக்கிறது. அதன்படி https://eregister.tnega.org/#/user/pass வலைத்தளம் மூலம் தான் இ-பாஸ் வாங்க முடியும். இந்த வலைத்தளத்தில் உங்களது கைப்பேசி எண்ணை பதிவு செய்தால் ஓ.டி.பி எண் வரும்,.
அதை வைத்து உள்ளே நுழைந்து தேவையான தகவல்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக தனிநபர் அல்லது குழுவாக சாலை வழிப்பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி விருப்பம் உள்ளது.
பின்பு ரயில் அல்லது விமானம் போன்றவற்றின் மூலமாக தமிழகம் வருவதாக இருந்தால் அதற்கும் ஒரு விருப்பம் உள்ளது. உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து அதற்கு தகுந்த தகவல்களை கொடுக்க வேண்டும்.
ஒருவேளை அந்த வலைத்தளத்தில் நீங்கள் சாலை வழிப்பயணம் விருப்பத்தை தேர்வு செய்தால் மருத்துவ அவசரம், இறப்பு, அரசு டெண்டர் விவகாரம், திருமணம், சொத்து பதிவு, சுற்றுலா, அரசுப் பணிகளை மேற்பார்வை செய்தல், உள்ளிட்ட பணி நிமித்தமாக வருதல் போன்ற காரணங்கள் அதில் இருக்கும்.
எனவே இந்த காரணங்களை கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர முடியும். இதில் எதுவும் இல்லையென்றாலும் கூட பிற காரணங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும், அதை கிளிக் செய்ய வேண்டும்.
மேலும் இந்த வலைத்தளத்தில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட எதாவது ஒன்றை கொடுத்து உங்களது அடையாள சான்று சமர்பிக்கலாம். அதேபோல் எந்த மாதிரி வாகனம், வாகனத்தின் பதிவு எண் போன்றவற்றையும் அதில் தெரிவிக்க வேண்டும்.