மாநில அரசின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதுதேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் இதனை நடைமுறைப்படுத்த அதிவிரைவாக தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இத்திட்டம் குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் கூறுகையில் ,
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மற்றும் அகில இந்திய நிதித்துறை தேர்வு போன்றவற்றை மத்திய அரசு அடியோடு கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இத்தகைய திட்டங்கள் ஆனது கூட்டாட்சி தத்துவத்தின் ஆணி வேரை பிடிங்கி எறியும் செயலாகவும் , மத்திய மாநில உறவை கேலி செய்யும் செயலாகவும் திகழ்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பொது வினியோகம் என்பது மாநில அரசுகளின் அடிப்படை உரிமை அதில் கைவைப்பது தேன்கூட்டில் கல்லெறிவதற்கு சமம் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.