கோவில் குளத்தில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூரில் புகழ்பெற்ற பட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் தண்ணீர் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் அந்த குளத்திற்குள் 3 ஐம்பொன் சிலைகள் கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கும், பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் அந்த சிலையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் அந்த 3 ஐம்பொன் சிலைகளையும் மர்ம நபர்கள் திருடி வந்து குளத்தில் வீசி உள்ளனரா அல்லது இது ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான சிலைகளா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறும்போது, இந்த சிலையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இந்த சிலைகள் மீட்கப்பட்ட பிறகு தொல்லியல் துறை ஆய்வுக்கு இது எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பதை தெரிந்துகொள்ள அனுப்பப்படும் எனவும் கூறியுள்ளனர். மேலும் இந்த சிலைகள் கோவிலுக்கு சொந்தமானவையா அல்லது யாரேனும் திருடி இங்கு வீசி உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.