தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ள நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதில்,
- தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும்.
- வீட்டில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
- வீட்டில் குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டவருக்கு பராமரிப்பு பணி செய்ய வேண்டும். பராமரிப்பு பணி செய்பவர் தவறாமல் முகக்கவசம், கையுறைகளை அணிய வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டவர் வெளியே எங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையிலே இருக்க வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், விரிப்புகளை தனியாக துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
- கையுறை, முககவசங்களை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
- முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் யாரும் தனிமைப்படுத்தப்பட்டவருடன் தொடர்பில் இருக்க கூடாது.
- தனிமைப்படுத்தப்பட்டவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் 108 அல்லது 1800 120 155550ஐ தொடர்பு கொள்ளலாம்.
- தனிமைப்படுத்தப்பட்டவருக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை 28 நாட்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
- வீட்டை தினமும் 3 முறையாவது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கார்ட்டூன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தியும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.