தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை மறுதினம் நடைபெற இருக்கின்றது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் மாதம் அனுமதி அளித்தது பசுமை தீர்ப்பாயம்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்த 2019 பி.ப் 27இல் உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 18ஆம் தேதி வழங்கப்பட்டது.
இந்த வழக்கு 39 நாட்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு, வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்ராயன் அமர்வு தீர்ப்பு வழங்கியதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் வேதாந்தா நிர்வாகம் நாடியது. இந்த வழக்கு வரும் 31-ஆம் தேதி விசாரிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு, மதிமுக உள்ளிட்டவை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.