தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின், தனது அசாத்தியமான பந்துவீச்சால் உலக கிரிக்கெட்டில் தடம் பதித்தவர். இவர் 93 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு ரசிகர் எந்த அணியின் பந்துவீச்சு சிறந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டெயின், இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சே தற்போது சிறந்ததாக உள்ளது என்று பதிலளித்தார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ்வர் குமார், உமேஸ் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் சிறப்பாக பந்துவீசி வருவதால் விராட் கோலியின் அணி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்றார். மேலும் தனக்குப் பிடித்த சிறந்த பேட்ஸ்மேன்களின் பெயராக டி காக், ஏபி டிவில்லியர்ஸ், கோலி ஆகியோரின் பெயரை அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டேல் ஸ்டெயினை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.