நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்ந்து வரும் நிலையில் காவல்துறையினர் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் அருகில் உள்ள கீரம்பூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை அருகில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது பாட்டில்களை விற்பனை செய்தது புலவர் பாளையம் பகுதியை சேர்ந்த ராஜூ என்ற தங்கராஜ்(53) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் தங்கராஜ் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.