கொரோனா தொற்று இன்னும் அழியவில்லை எனவே விதிமுறைகளை பின்பற்றி கவனமாக இருக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று பிரிட்டனிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்கிருக்கும் மக்கள் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் தெருவோர கேளிக்கைகளிலும் கடற்கரையில் கூட்டம் கூடுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் இருக்கும் போர்ன்மவுத் மற்றும் அதனை சுற்றி இருக்கும் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று குவிந்ததே இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஜூலை மாதம் 4 ஆம் தேதி முதல் பிரிட்டனில் அமல்படுத்தப் பட்டிருக்கும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட இருக்கும் நிலையில் இவர்களின் செயல்கள் தொற்று பரவலை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே ஊரடங்கில் தளர்வு இருக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு மற்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “ஜூலை 4 ஆம் தேதி தான் தளர்வுகள் என்பதை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
முறையாக விதிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கொரோனா தொற்றை வெற்றி பெறவேண்டும். இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று நினைக்கலாம். அது உண்மையாக இருந்தாலும் அவர்கள் மூலமாக தொற்று முதியவர்களை தாக்கக்கூடும். கொரோனா இன்னும் அழியவில்லை. வெளியில்தான் காத்திருக்கின்றது. இதை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.