கடலூரில் பிரசவம் பார்த்த பெண்மணி வயற்றில் மருத்துவர்கள் பஞ்சு வைத்து தைத்ததாக கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் அப்பகுதியில் உள்ள நெடுவன்குப்பத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின் இருவரும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரியா கர்ப்பமாக அவருக்கு கடந்த மாதம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
பின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட பிரியாவுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி அன்று வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு வலியால் துடித்தார். இதையடுத்து அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் எவ்வித பயனுமின்றி உயிரிழந்தார். இதையடுத்து நேற்று காலை பிரியாவின் உறவினர்கள் விருதாச்சலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதில் பிரியா வயிற்றில் மருத்துவர்கள் பஞ்சு வைத்து தைத்ததால் தான் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும், ஆகையால் அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட தாசில்தார் காவல்துறையினர் உட்பட பல அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிரியாவின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக புகார் தாருங்கள் காவல்துறை சார்பில் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.