விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் சில மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்த சூழலில் விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதால் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின்சார வாரியம் விவசாய பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கப்படுகிறது என்பதை அளவிட மட்டுமே மின்மீட்டர்கள் பொருத்தப்படுகிறது. இலவச விவசாய மின் இணைப்பு தரும்போது மீட்டர் பொருத்துவது 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின்சார துறை அமைச்சர் தங்கமணி,
முதல்வர் உத்தரவிட்டதால் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டது என கூறியுள்ளார். தட்கல் திட்டத்தில் மட்டும் மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில் அதையும் வேண்டாம் என முதல்வர் கூறினார். முதல்வர் உத்தரவால் விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.