தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார்.
முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும். முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு அனுமதி. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 26ம் தேதி முதல் 29 வரை சென்னையில் மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகள் இயங்காது என கூறப்பட்டது. தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கும், பறக்கும் படைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் காலை 8 முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கலாம். அச்சு ஊடகம், காட்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.