தமிழகத்தில் தற்போது மாண்டஸ் புயல் வலுப்பெற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த புயல் மற்றும் கனமழையின் காரணமாக அரசாங்கம் பொது மக்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் புயல் மற்றும் மழையின் போது என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
1. கனமழையின் போது செய்ய வேண்டியவை:
* கண்ணாடி ஜன்னல்களை பாதுகாக்க மரப்பலகைகளை கைவசம் வைத்திருப்பதோடு வீட்டில் உடைந்திருக்கும் ஓடுகளை முன்கூட்டியே சிமெண்ட் வைத்து பூசி விட வேண்டும்.
* வீட்டை சுற்றி இருக்கும் பழமையான நகரங்களை வெட்டி அகற்றுவதோடு காற்றில் பறந்து செல்லக்கூடிய பொருட்களை பத்திரப்படுத்த வேண்டும்.
* மழை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் மின்வெட்டு ஏற்படலாம். எனவே மண்ணெண்ணெய் விளக்கு மற்றும் பேட்டரி விளக்குகள் போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* வானிலை எச்சரிக்கைகளை அடிக்கடி தெரிந்து கொள்ள வானொலியை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
* கடலோரம் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் முன்கூட்டியே தங்களுடைய உடைமைகளை எடுத்துவிட்டு வீட்டில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
* உணவு மற்றும் குடிநீரை கைவசம் வைத்திருப்பதோடு, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருந்தால் அவர்களுக்கான உணவுகளையும் எடுத்து வைத்திருப்பது நல்லது.
* அவசர தேவைக்கு அவசர உதவி எண்களை அழைப்பதோடு, முக்கியமான சான்றிதழ்கள், உடைமைகள் மற்றும் பொருட்களை முன்கூட்டியே பத்திரப்படுத்திட வேண்டும்.
* கால்நடைகளை மேடான பகுதிகளில் கட்டி வைப்பதோடு, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. கனமழையின் போது செய்யக்கூடாதவை:
* அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டுமே தவிர சமூக வலைதளங்களில் வரும் போலி செய்திகளை நம்பக்கூடாது.
*புயல் கரையைக் கடக்கும் போது வெளியே செல்லாமல் இருப்பதோடு, புயலுக்கு இடையில் அமைதியாக இருக்கும் நேரத்திலும் வெளியில் வரக்கூடாது.
* மின் கம்பங்களில் உள்ள விளக்குகள், ஒயர்கள், மின் கம்பங்களை ஒட்டி உள்ள இரும்பு பெட்டிகள் போன்றவற்றை தொடக்கூடாது.
* மழை நேரங்களில் கால்களில் காலணி அணியாமல் வெறும் காலில் வெளியே செல்லக்கூடாது.
* முகாம்ங்களில் இருப்பவர்கள் அரசு அறிவிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டும். அதற்கு முன்பாக வெளியேறக்கூடாது.
* மேலும் மழை நேரத்தில் ஏதாவது அவசர தேவை மற்றும் அவசரமாக பொருட்கள் வாங்க வேண்டி இருந்தால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்